கொரோனா நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது

கொரோனா நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-05-19 23:47 GMT
திருவாரூர், 

கொரோனா நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆர்ப்பாட்டம்

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.

மதுக்கடைகளை மூட வேண்டும். விவசாய கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். சிறு-குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

திருவாரூர்

அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாசிலாமணி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகானந்தம், நகர செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் தர்மதாஸ், செல்வமணி, சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சமூக இடைவெளி கடைபிடித்து கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு நகரக்குழு சார்பில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பாக நகரச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையிலும், கீழபாலத்தில் விவசாய சங்க நகர செயலாளர் கலியபெருமாள் தலைமையிலும், பெரியார் சிலை அருகில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் மணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பார்த்திபன், சிவ.ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர். மன்னார்குடி இந்திய கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு சார்பில் 40 இடங்களில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சவளக்காரனில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன், ஒன்றிய செயலாளர் பாப்பையன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மன்னார்குடி ஒன்றியத்தில் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆலங்கோட்டையில் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி ஒன்றியத்தில் 6 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மையப்பனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் கேசவராஜ் தலைமை தாங்கினார். கொரடாச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

பெருமாளகரத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணை செயலாளர் தேசபந்து, களத்தூரில் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் முருகையன், பத்தூரில் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, அபிவிருத்தீஸ்வரத்தில் கிளை செயலாளர் மோகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளி விட்டு கையில் கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கோட்டூர்-வலங்கைமான்

கோட்டூர் அருகே உள்ள பள்ளிவர்த்தி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். களப்பாலில் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன், குறிச்சிமூலையில் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுடைநம்பி, கோட்டூரில் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, ஆதிச்சபுரத்தில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சிவசண்முகம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வலங்கைமான் ஒன்றியத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்