கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2020-05-19 23:00 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் 25-ந் தேதி தொடங்கி ஜூலை மாதம் 4-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார். கொரோனா தொடர்பாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுரேஷ்குமார் கூறினார்.

தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அதற்கான கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஜூன் மாதம் 25-ந் தேதி தொடங்குகிறது. முதல் நாள் அதாவது 25-ந் தேதி 3-வது மொழி ஆங்கிலம், கன்னடம், 26-ந் தேதி பொருளியல், 27-ந் தேதி கணிதம், சமூக வியல், 28-ந் தேதி விடுமுறை, 29-ந் தேதி அறிவியல், 30ந் தேதி விடுமுறை, ஜூலை மாதம் 1-ந் தேதி சமூக அறிவியல், 2-ந் தேதி முதல் மொழி கன்னடம், தெலுங்கு, இந்தி, மராட்டி, தமிழ், உருது, ஆங்கிலம் கலாசாரம் பாடத்தேர்வு நடைபெறும்.

தினந்தோறும் தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். 8.48 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.”

இவ்வாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், பொது கல்வித்துறை கமிஷனருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான நேரம் நெருங்கிவிட்டது. தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் முகக்கவசம் கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். தேர்வு அறைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவது என்பது, உங்களின் திறமைக்கான தேர்வாகவும் கருதப்படும். அதனால் உங்களுக்கு வழங்கியுள்ள பணியை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்