தாவணகெரேவில், சமூக வலைத்தளங்களில் மத கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது

தாவணகெரேவில், சமூக வலைத்தளங்களில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-19 22:30 GMT
தாவணகெரே, 

தாவணகெரேவில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இந்துக்களுக்கு சொந்தமான ஜவுளிக்கடைகளில் முஸ்லிம் மக்கள் யாரும் துணிகள் வாங்கக்கூடாது என்று முஸ்லிம் வாலிபர்கள் சிலர் கடந்த சில நாட்களாக முன்பு வீடியோ ஒன்று பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுதொடர்பாக பசவ நகர், கெடச்சி, ஹரிஹரா ஆகிய 3 போலீஸ் நிலையங் களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்ட முஸ்லிம் வாலிபர்கள் பயாஸ் அகமது, இம்தியாஸ், மன்சூர், சையது அபாஜ், அகமது ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக தாவணகெரே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமந்த்ராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தாவணகெரேவில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம் மக்கள், இந்துக்களுக்கு சொந்தமான ஜவுளிக்கடைகளில் துணிகள் வாங்கக்கூடாது என்று கூறி பயாஸ் அகமது உள்ளிட்ட 5 பேரும் தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பசவநகர், கெடச்சி, ஹரிஹரா ஆகிய போலீஸ் நிலையங்களில் 3 வழகுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 வழக்குகள் தொடர்பாக பயாஸ் அகமது உள்ளிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 5 பேரும் வினோபா நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். தாவணகெரேவில் அமைதி நிலவி வருகிறது.

தாவணகெரே மாவட்டத்தில் சிலர் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்