கர்நாடகத்தில் இருந்து 5 சிறப்பு ரெயில்களில் 7 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்
கொரோனா ஊரடங்கால் கர்நாடகத்தில் சிக்கி தவிக்கும் பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா ஊரடங்கால் கர்நாடகத்தில் சிக்கி தவிக்கும் பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று கர்நாடகத்தில் இருந்து 5 சிறப்பு ரெயில்களில் 29 சிறுவர்-சிறுமிகள் உள்பட 7,184 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
* உப்பள்ளியில் இருந்து நேற்று மதியம் 12 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் கட்டியாவுக்கு புறப்பட்ட ரெயிலில் 1,477 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.
* கோலார் மாவட்டம் மாலூரில் இருந்து பீகார் மாநிலம் சஹார்ஷாவுக்கு நேற்று மதியம் 3.15 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரெயிலில் 29 குழந்தைகள் உள்பட 1,529 பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்தனர்.
* பெங்களூரு சிக்கபானவாராவில் இருந்து மத்தியபிரதேச மாநிலம் குவாலியருக்கு நேற்று மதியம் 3.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. இதில், 1549 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.
* கோலார் மாவட்டம் மாலூரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் லல்குவான் நோக்கி சென்ற சிறப்பு ரெயிலில் 1,081 தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.
* பெங்களூரு சிக்கபானவாராவில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் மாவு நோக்கி புறப்பட்ட சிறப்பு ரெயிலில் 1,548 பயணிகள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
இதுவரை கர்நாடகத்தில் இருந்து 90 சிறப்பு ரெயில்களில் 1,24,133 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.