வாணாபுரம் பகுதியில் சூறை காற்றுடன் மழை: புளியமரம் வேரோடு சாய்ந்ததில் 2 பசு மாடுகள் பலி - மின்கம்பங்களும் சேதம்
வாணாபுரம் அருகே குறைக்காற்றுடன் பெய்த மழையால் புளிய மரம் வேரோடு சாய்ந்ததில் 2 பசுமாடுகள் பரிதாபமாக இறந்தன. 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதமடைந்தன
வாணாபுரம்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதேபோல் வாணாபுரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் வீடுகளில் மரங்கள் சாய்ந்து சேதமானது.
தண்டராம்பட்டு செல்லும் வழியில் உண்ணாமலை சாலையில் புளியமரம் வேருடன் சாய்ந்ததில் 2 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. அப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் காற்றில் சாய்ந்தன.
பலத்த காற்றால் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் மரங்கள் சாய்ந்ததால், அந்த வழியாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் வந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்தனர்.
வாழவச்சனூர் தென்பெண்ணையாற்றில் 200 ஆண்டு கால ஆலமரம் முழுவதும் சேதம் ஏற்பட்டு, மரத்தின் கீழே இருந்த சிவலிங்கம் உடைந்தது. வாழவச்சனூரில் பல மர இழைப்பகம் மற்றும் குடோன்கள் கூரைகள் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்தன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு; போளூர் 43.2, தண்டராம்பட்டு 31.6, கலசபாக்கம் 27, திருவண்ணாமலை 8.4, செங்கம் 7.1, கீழ்பென்னாத்தூர் 5.8, செய்யாறு 4, வெம்பாக்கம் 4, வந்தவாசி 1.
போளூரில் நேற்று முன்தினம் மாலை இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. போளூரில் பெய்த மழை அளவு 43.20 மில்லி மீட்டர் பதிவானது. சூறைக்காற்றால் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பின்பக்க சாலையில் இருந்த ஒரு புங்கமரம் வேருடன் சாய்ந்தது. சனிக்கவாடி கிராமத்தில் சாலையோரம் மரக் கிளைகள் முறிந்து விழுந்தன. ஆனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. வசூர், ராமாபுரம் கிராமங்களில் சில வாழைமரங்கள் சாய்ந்தன.