ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பிடலாம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை, அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக சாப்பிடலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இன்று (புதன் கிழமை) முதல் ஊரடங்கு முடியும் வரை பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றை விரட்ட நாம் அனைவரும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். சென்னையில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 26 லட்சம் மக்களுக்கு 50 லட்சம் முக கவசங்கள் வழங்க வேண்டும். நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள், சீர்மிகு நகரத் திட்டப்பணிகள், அம்ரூத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தெருவிளக்கு மற்றும் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு திட்டப்பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து முடித்திட வேண்டும்.
சுய உதவி குழுக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் சிறப்பு கடனுதவி கொரோனாவுக்காக சில வங்கிகள் வழங்கிய சிறப்பு கடனுதவியினை முறையாக சுய உதவி குழுக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
அம்மா இருசக்கர திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இலக்கு முழுவதையும் விரைந்து முடிக்க வேண்டும். ஊரடங்கு காலத்திலும் இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் 82 லட்சம் முக கவசங்களை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட மின்மதி செயலியின் மூலம் பொதுமக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. தற்பொழுது இந்தச் செயலியை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சம் நபர்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.