தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ, கார் டிரைவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் மனு

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ, கார் டிரைவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2020-05-19 23:15 GMT
வேலூர், 

சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்.டி.டி.யு.) வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது சலீம் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. அதன்காரணமாக சுமார் 50 நாட்களுக்கு மேலாக ஆட்டோ, கார் ஆகியவை இயங்கவில்லை. அதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். பெரும்பாலான டிரைவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன.

4-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வேலூர் உள்பட 25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற அனுமதி பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டன. எனவே வேலூர் மாவட்ட டிரைவர்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவைக்கு இ-பாஸ் இல்லாமல் சமூக இடைவெளியுடன் ஆட்டோ, கார் இயங்க அனுமதி அளிக்க வேண்டும்.

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த டிரைவர்களுக்கு மட்டும் ரூ.1,000 சிறப்பு நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. நலவாரியத்தில் 10 சதவீதம் டிரைவர்களே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 90 சதவீதம் டிரைவர்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை காணப்படுகிறது.

எனவே அனைத்து ஆட்டோ, கார் டிரைவர்களுக்கும் ஊரடங்கு காலத்தில் நிவாரண உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கி குடும்பத்தின் வறுமையை போக்க வேண்டும். மேலும் வாகனங்கள் புதுப்பித்தல் கட்டணத்தை வருகிற டிசம்பர் மாதம் வரை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்