மராட்டியத்தில் இருந்து விருத்தாசலம் வந்த 4 வயது பெண் குழந்தைக்கு கொரோனா

மராட்டிய மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் வந்த 4 வயது பெண் குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-05-19 04:25 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மராட்டிய மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் வந்த 4 வயது பெண் குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த குழந்தையும், தாயும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 417-ல் இருந்து 418- ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 377 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3 பேர், கிருஷ்ணா நர்சிங் பயிற்சி பள்ளியில் 14 பேர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் என மொத்தம் 18 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்புடன் திரும்பினர்.

41 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ள 3,331 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் இது வரை 9 ஆயிரத்து 303 பேருக்கு உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 807 பேருக்கு பாதிப்பு இல்லை. 78 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். நேற்று 367 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் மொத்தம் 445 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்