வைகாசி விசாக விழாவில் திருப்பரங்குன்றம் முருகன்கோவிலில் 10 மணி நேரம் நடக்கும் பாலாபிஷேகம் இணையதளத்தில் ஒளிபரப்பாகுமா?

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில் 10 மணி நேரம் நடக்கும் பாலாபிஷேக காட்சியை உள் திருவிழாவாக நடத்தி இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-05-19 03:40 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அதில் திருவிழாவின் 9-வதுநாள் விசாக விழா கோலாகலமாக கொண்டாடப்படும். விசாக விழாவில் முருக பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். அதிகாலை 5 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை இடைவிடாது சுமார் 10 மணி நேரம் வரை மகா பாலாபிஷேகம் நடைபெறுவது இந்த திருவிழாவில் மட்டும்தான்.

இதை காண மதுரை நகர் பகுதியில் இருந்தும், திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி உள்ளிட்ட காவடிகளை சுமந்தும், அலகு குத்தி வந்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இணையதளம்

இந்த ஆண்டிற்கான விசாக விசேஷ திருவிழா வருகிற 4-ந்தேதி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திருவிழாவுக்கான வசந்த உற்சவத்தின் காப்பு கட்டுதல் 26-ந் தேதி நடக்குமா? திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான விசாக திருவிழா 4-ந்தேதி நடக்குமா? என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த மாதம் 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டால் விசாக திருவிழா நடைபெறும். அதேசமயம் ஜூன் மாதத்திலும் ஊரடங்கு தொடர்ந்தால் விசாக திருவிழா நடைபெறுவது கேள்விக்குறிதான் என கூறப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவிலில் உள் திருவிழாவைநடத்தி அதை இணையதளத்தின் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதேபோல வருகிற 4-ந் தேதி விசாக திருவிழாவை கோவிலுக்குள் உள்திருவிழாவாக வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தி அதை இணையதளம் மூலமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்