சேலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் வெறிச்சோடின

சேலத்தில் நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-05-19 01:23 GMT

சேலம், 

சேலம் மாவட்டத்தில் 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 30 கடைகள் செயல்பட்டு வருவதால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மீதமுள்ள 186 மதுக் கடைகளும் திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. கடைகளில் மது வாங்க வரும் மது பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கட்டைகளால் வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மது பிரியர்கள் சமூக இடைவெளியுடன் நீண்டவரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கி சென்றனர்.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி மட்டும் ரூ.41 கோடிக்கு மது பானங்கள் விற்கப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளில் கடந்த 16 மற்றும் 17-ந் தேதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் நேற்று அனைத்து கடைகளிலும் மிகக்குறைந்த அளவே மது பிரியர்கள் மது வாங்குவதற்காக வந்திருந்தனர். இதனால் நேற்று காலை கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

சேலத்தில் டவுன் ரயில் நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடை, முள்ளுவாடி கேட், சத்திரம் உள்ளிட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளும் மதியத்திற்கு பின்பு வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நிலையில் கூடுதலாக 2 மணி நேரம் மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்று நேற்று அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மூடப்பட்டு வந்த மதுபான கடைகள் நேற்று இரவு 7 மணி வரை திறந்து இருந்தன.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான மதுக் கடைகளில் நேற்று மதுபானங்கள் வாங்க ஆட்கள் வரவில்லை. ஒரு சில கடைகளில் மட்டும் அவ்வப்போது ஒரு சிலர் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறுகையில், 2 நாட்களாக தினமும் 500 டோக்கன் வழங்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்து வந்தோம். பெரும்பாலானோர் மதுபானங்களை வாங்கி விட்டனர். இதனால் மதுபானங்கள் வாங்க ஆட்கள் வரவில்லை, என்றனர்

மேலும் செய்திகள்