கோவையில் தொழிலாளி கொலை வழக்கில் நண்பர் உள்பட 3 பேர் கைது கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலம்
கோவையில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.
கோவை,
கோவை சிங்காநல்லூரை அடுத்த படக்கேகவுண்டர் வீதியை சேர்ந்தவர் சித்திரைவேல்(வயது 28). கட்டிட தொழிலாளி. திருமணமாகவில்லை. இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள உத்தமதானபுரம் ஆகும். இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலையில் சித்திரைவேல், படக்கேகவுண்டர் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை அடித்து கொன்றுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார், தலைமை காவலர் சுகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சித்திரைவேல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கள்ளக்காதல்
சித்திரைவேலுக்கும் அவருடைய அண்ணனின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து உள்ளது. இதையடுத்து அந்த கள்ளக்காதலி, தனது கணவரை பிரிந்து சித்திரைவேலுவுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் சித்திரைவேல் தனது நண்பரான வெள்ளலூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் ராஜன் (34) என்பவரிடம் தனது கள்ளக்காதலியை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு ராஜனுக்கும், சித்திரைவேலுவின் கள்ளக்காதலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த கள்ளக்காதலி சித்திரைவேலை விட்டு பிரிந்து ராஜனுடன் சென்றுவிட்டார். இந்த விவகாரம் சித்திரைவேலுக்கு தெரியவந்தது. இதற்கிடையே ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவர் தினமும் குடித்துவிட்டு வந்து கள்ளக்காதலியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இதில் மனவேதனையடைந்த அந்த கள்ளக்காதலி, ராஜனை விட்டு பிரிந்து மீண்டும் தனது கணவரிடம் சென்றுவிட்டார்.
3 பேர் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சித்திரைவேல், இது தொடர்பாக தனது நண்பர் ராஜனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜன், செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் (29), செல்வக்குமார் (27) ஆகியோருடன் சித்திரைவேல் வீட்டுக்கு சென்றார்.பின்னர் 3 பேரும் சேர்ந்து, அங்கிருந்த சித்திரைவேலை தாக்கி அவரது தலையை பிடித்து, சுவரில் மோதினர். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்து இறந்தார். அதன்பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.