ராமநாதபுரம், விருதுநகரில் குழந்தை உள்பட 10 பேருக்கு கொரோனா - வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்த குழந்தை உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 31 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 பேர் சிவகங்கை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும், பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குழந்தை உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் தாலுகா நல்லூர் பகுதியை சேர்ந்த 1½ வயது குழந்தை, 58 வயது நபர், மேலபன்னைக்குளத்தை சேர்ந்த 3 வாலிபர்கள், கீழக்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவர்கள் அங்கிருந்து வந்தனர். அவர்களை கமுதி மற்றும் பரமக்குடி, பார்த்திபனூர் பள்ளிகளில் தனிமைப்படுத்தி தங்க வைத்திருந்தனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையடுத்து இவர்கள் தனிமைப் படுத்தப்பட்ட பள்ளிகளில் இருந்த மற்றவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து திரும்பிய 5 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் அருப்புக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் மும்பையில் இருந்து திரும்பிய தொழிலாளர்கள் ஆவர்.
இதில் அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னசெட்டிபட்டியை சேர்ந்த 53 வயது நபர், பந்தல்குடியை சேர்ந்த 41 வயதுடையவர், விருதுநகர் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்த 52 வயதானவர், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கஞ்சம்பட்டியை சேர்ந்த 44 வயதானவர் என 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது.