டோக்கன் இல்லாமலும் மதுபாட்டில்கள் வினியோகம்: கோவையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை விறுவிறுப்பு

கோவையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மேலும் டோக்கன் முறையினால் நெரிசலும் குறைந்தது. சில கடைகளில் டோக்கன் இல்லாமலும் மது விற்கப்பட்டது.

Update: 2020-05-17 22:15 GMT
கோவை,

தமிழகத்தில் கடந்த 9-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மேலும் டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் கூட்டம் சேருவதை கட்டுப்படுத்துவதற்காக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டன. இதற்காக 7 நிறங்களில் டோக்கன்கள் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 283 கடைகள் திறக்கப்பட்டன. அதில் கடந்த 2 நாட்களாக விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.17 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மது விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. சில கடைகளில் ஒரு மணி நேரத்தில் 70 டோக்கன்களும் கொடுக்கப்பட்டு விட்டதால் அதன்பின்னர் வந்தவர்களுக்கு டோக்கன் இல்லாமலும் மதுபாட்டில்கள் விற்கப்பட்டன.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் சேராமல் இருப்பதற்காக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டன. இதனால் கூட்ட நெரிசல் இல்லை. மேலும் மதுவாங்க வருபவர்கள் வரிசையில் வர வேண்டும் என்பதற்காக அனைத்து கடைகள் முன்பும் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. கடையின் முன்பு இடம் இல்லாவிட்டாலும் கடையின் இரண்டு புறமும் வந்து மதுவாங்குபவர்கள் வரிசையில் நிற்பதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டன.

மேலும் அதில் சமூகஇடைவெளி விட்டு நடந்து வர வேண்டும் என்பதற்காக ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் போடப்பட்டிருந்தன. அதில் மதுபிரியர்கள் நடந்து வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றார்கள்.

டாஸ்மாக் கடைகள் முன்பு ஒருவர் டோக்கன் கொடுத்தார். கிருமி நாசினி கொடுப்பதற்காக மற்றொருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

மதுவாங்க வந்த அனைவரும் கிருமி நாசினி கொண்டு கையை கழுவிய பின்னரும் முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஆரஞ்சு நிற டோக்கன் கொடுக்கப்பட்டு அதன் மூலம் மது விற்பனை நடந்தது.

நேற்றுக்காலை கடைகள் திறந்தவுடன் 5 அல்லது 10 பேர் தான் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் கொடுத்த பின்னர் மற்றவர்கள் வந்து வரிசையில் வந்து நின்றனர். பெரும்பாலான கடைகளில் யாரும் வரிசையில் நிற்காமல் வந்தவுடன் டோக்கன் பெற்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஒரு மணி நேரத்தில் 70 டோக்கன் தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்ததால் சில கடைகளில் 30 நிமிடங்களிலேயே 70 டோக்கன்கள் கொடுக்கப்பட்டு விட்டன.

ஒரு நாளில் 500 பேருக்குத் தான் மது கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே அதாவது மாலை 4 மணிக்கே 500 டோக்கன்களும் தீர்ந்து விட்டன.

ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் 2 போலீசார், ஊர்க்கால் படை வீரர் ஒருவர் என மொத்தம் 3 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் ரோந்து போலீசாரும் அடிக்கடி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்