திருச்சியில் பரபரப்பு: ராணுவ கேண்டீனில் மதுபாட்டில்கள் கேட்டு முன்னாள் வீரர்கள் வாக்குவாதம்

திருச்சியில் ராணுவ கேண்டீனில் மதுபாட்டில்கள் கேட்டு முன்னாள் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-18 00:00 GMT
திருச்சி, 

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தலைமை மிலிட்டரி கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இந்த கேண்டீனில் உணவு பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் 3 கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கேண்டீனின் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து ராணுவ கேண்டீன் செயல்பட தொடங்கியது. அப்போது மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டன. பின்னர் கோர்ட்டு தடையால் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையொட்டி, ராணுவ கேண்டீனிலும் மதுபாட்டில்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.

டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படுகிறதோ, அன்றைய தினத்தில் இருந்து மதுபாட்டில்கள் கேண்டீனில் வழங்கப்படும் என கேண்டீன் மேலாளர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நேற்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இதனால் திருச்சி ராணுவ கேண்டீனிலும் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர். பின்னர் கேண்டீன் நிர்வாகத்திடம் மதுபாட்டில்களை கேட்டபோது, தலைமையிடத்தில் இருந்து அறிவிப்பு வரவில்லை என்றும், மேலும் மதுபாட்டில்கள் இருப்பு (ஸ்டாக்) இல்லை என்றும், அதனால், வழங்க முடியாது என பதில் அளிக்கப்பட்டது.

இதனால், ஆவேசம் அடைந்த முன்னாள் ராணுவவீரர்கள் கேண்டீனை மேலாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மதுபாட்டில் வந்ததும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும் என சொல்லப்பட்டதையொட்டி அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து முன்னாள் ராணுவவீரர் ஒருவர் கூறுகையில், ‘கேண்டீனில் சலுகை விலையில் மதுபாட்டில்கள் பெறுவதற்கு எங்களுக்கு உரிமையும், சலுகையும் உள்ளது. ஏற்கனவே, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதும் கேண்டீனிலும் மதுபாட்டில்கள் வழங் கப்படும் என கூறியதன் பேரில்தான் பல ஊர்களில் இருந்து வந்தோம். ஆனால், கேண்டீன் மேலாளர் சரியான பதிலை தெரிவிக்க மறுக்கிறார்’ என்றார்.

மேலும் செய்திகள்