அரக்கோணம் பகுதியில், டாஸ்மாக் கடைகளில் வழங்கப்பட்ட டோக்கன் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டதா? அதிகாரிகள் விசாரணை
அரக்கோணம் பகுதி டாஸ்மாக் கடைகளில் வழங்கப்பட்ட டோக்கனைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால் டோக்கன்கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்,
நேற்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை பகுதியிலும், அம்பரிஷிபுரம் பகுதியிலும் உள்ள மதுபானக்கடைகளில் பகல் 1 மணி அளவில்தான் மது விற்பனை தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை பகுதியிலிருந்து மதுபானங்களை ஏற்றி வரும் வாகனம் பழுதாகி விட்டதால் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக மது விற்பனை தொடங்கியதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் குடைகளுடன் வரிசையில் சமூக இடைவெளியின்றி காத்திருந்தனர். காலை 8 மணிக்கே பலர் வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் வீடுகளில் இருந்தும், கடைகளில் பார்சல் சாப்பாடு வாங்கி வந்தும் சாப்பிட்டு வரிசையில் காத்திருந்தனர்.
அரக்கோணம் அருகே சில மதுக்கடைகளின் முன்பு, வழங்கப்பட்ட டோக்கன்களை விட அதிகமானோர் வரிசையில் காத்திருந்ததால் டோக் கனை கலர் ஜெராக்ஸ் எடுத்திருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து அதை ரூ.100, ரூ.200-க்கு விற்பனை செய்திருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுந்தது. இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கும்பினிபேட்டை, கைனூர், சோளிங்கர், பாணாவரம், நெமிலி, அரக்கோணம் தாலுகா பகுதிகள், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன் உடன் இருந்தார்.