மதுரையில் 3 மாத குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 19 பேர் குணமடைந்தனர்

மதுரையில் 3 மாத குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 19 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2020-05-16 22:45 GMT
மதுரை, 

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் வரை 88 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதுரையைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 4 பேரும் மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த 44 வயது நபர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 மாத குழந்தை ஆகியோருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மற்றொருவர் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த 54 வயது நபர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து மதுரை வந்தார். அதன் பின்னர் அவர் வீட்டு கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.

மற்றொருவர் மதுரை கரிசல்குளம் பகுதியை சேர்ந்த 44 வயது பெண். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது இவர்கள் 4 பேரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டன. அவர்கள் வசித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147-ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் ஏற்கனவே 88 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் மதுரை செல்லூர், பெத்தானியாபுரம், கூடல்புதூர், மானூத்து, வில்லாபுரம், கீரைத்துறை, மலம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 சிறுவர்கள், 8 ஆண்கள், 9 பெண்கள் என 19 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. எனவே சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 38-ஆக குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்