சமயபுரத்தில் பரபரப்பு மதுப்பிரியர்கள் கும்பலாக வந்ததால் விரட்டி அடித்த போலீசார்
சமயபுரத்தில் மதுப்பிரியர்கள் கும்பலாக வந்ததால் போலீசார் அவர்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சமயபுரம்,
சமயபுரத்தில் மதுப்பிரியர்கள் கும்பலாக வந்ததால் போலீசார் அவர்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் மீண்டும் திறப்பு
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று காலை டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்படி திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு நேற்று மது விற்பனை தொடங்கியது. ஒவ்வொரு கடையிலும் தினமும் 500 பேருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும், இதற்காக 7 நாட்களும் ஒரு நிறத்தில் டோக்கன் வழங்க 7 நிறங்களில் டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டு இருந்தன.
சமயபுரம் நால் ரோட்டில் உள்ள 2 மதுக்கடைகளிலும் மதுவாங்க வந்தவர்களை அங்கிருந்த ஒரு திருமண மண்டப வளாகத்தில் நாற்காலி போட்டு அமர வைத்து இருந்தனர். அவர்களை போலீசார் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தனர். பின்னர் முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே சமயபுரம் நால் ரோட்டில் இருந்து மது வாங்க இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
விரட்டி அடித்த போலீசார்
அப்போது, வாகனங்களை நிறுத்திய மதுப்பிரியர்கள், ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்பதால் மதுபாட்டில்களை வாங்கும் ஆர்வத்தோடு கும்பலாக ஓடி வர தொடங்கினர். இதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கையில் லத்தியை எடுத்துக் கொண்டு அவர்களை விரட்டி அடிக்க தொடங்கினர்.
இதனால் மதுப்பிரியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக் சம்பந்தப்பட்ட மதுக்கடைக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.