அனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

அனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-05-17 02:35 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார் இணைந்து வழுதாவூர் சாலையில் முத்திரையர்பாளையத்தில் இருந்து காந்தி நகர் வரை கழிவுநீர் வாய்க்கால் மற்றும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

இதில் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஏழுமலை, இளநிலை பொறியாளர்கள் தேவதாஸ், கோதண்டம், நவசக்தி மற்றும் பலர் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையோரம் இருந்த இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் உள்பட பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றி நகராட்சி வண்டியில் ஏற்றிச்சென்றனர்.

கொரோனா தொற்று பரவும் அபாயம்

இது குறித்து நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறியதாவது:-

சாலையோர கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம், கூட்டமாக நின்று பொருட் களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களை வரைமுறைப்படுத்துவது சிரமமாக உள்ளது. அதேசமயம் நகராட்சிக்கு சொந்தமாக உள்ள காந்தி நகர், சண்முகாபுரம், அஜீஸ் நகர், முத்திரையர்பாளையம் போன்ற மார்க்கெட்டுகளில் பல கடைகள் எடுத்து நடத்தப்படாமல் உள்ளன.

மார்க்கெட் பகுதிகளுக்கு மக்கள் பொருட்களை வாங்கச் சென்றால் சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்ய முடியும். மேலும் சாலையோரங்களில் ஆட்டு இறைச்சியை விற்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதியும், நகராட்சியிடம் வணிக உரிமமும் பெறாமல் விற்று வருகின்றனர். இங்கு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருப்பதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே சாலையோரம் உள்ள இறைச்சி கடைகளை அகற்றியுள்ளோம். ஆட்டு இறைச்சி விற்பவர்கள் 2 துறைகளிலும் அனுமதி பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்