நெல்லை- தென்காசியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் குடை பிடித்து ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் குடை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,
நெல்லை, தென்காசியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் குடை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஊரடங்கை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் செய்து வரும் அரசியலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் சாகுல் அமீது உஸ்மானி, செய்யது அகமது, செயலாளர் ஹையாத் முகமது, பர்கீட் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 3 முறை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கிட்டதட்ட 50 நாட்களாக பொதுமக்கள் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். புலம் பெயந்த தொழிலாளர்கள் உணவு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
திட்டமிடப்படாத ஊரடங்கு
வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். கொரோனா பரவலை ஒரு குறிப்பிட்ட சமுகத்தினருக்கு எதிராக வெறுப்பினை தூண்டும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மத்திய அரசு கொரோனா நிவாரண நிதியை மாநில அரசுகளுக்கு ஒதுக்கவில்லை. தன்னாட்சி அதிகாரம் பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்த ஊரடங்கை பயன்படுத்தி மத்திய ஜல்சக்தி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு நடவடிக்கையில் மாநில அரசின் செயல்பாடுகள் மக்களின் துயரை போக்கும் வகையில் அமையவில்லை. ஊரடங்கை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் தங்கள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. அதை நாம் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமூக இடைவெளியை வலியுறுத்தும் வகையில் குடை பிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கையுறை, முக கவசம் அணிந்து இருந்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் போடப்பட்டன.
தென்காசி
தென்காசி மவுண்ட் ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் செய்யது மஹ்மூத் தலைமை தாங்கினார். நகர செயற்குழு உறுப்பினர் பீர் முஹம்மது முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாவட்ட செயலாளர் சர்தார், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபால் விக்கிரமசிங்கபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர், வீரகேரளம்புதூர், சேரன்மாதேவி, களக்காடு, ஏர்வாடி, பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.