மது பிரியர்கள் உற்சாகம்: மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு டோக்கன் பெற்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்கள் டோக்கன் பெற்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

Update: 2020-05-17 02:00 GMT
கடலூர்,

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இருந்த போதிலும் தமிழகம் முழுவதும் கடந்த 7-ந்தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் உற்சாகமடைந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். ஆனால் நிபந்தனைகள் எதையும் அரசு பின்பற்றவில்லை. இதனால் கொரோனா நோய் தீவிரமாகும். ஆகவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ரூ.13 கோடி

இந்த வழக்கை மறுநாள் விசாரித்த ஐகோர்ட்டு, மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. ஊரடங்கு உத்தரவு முடியும் வரை கடையை திறக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இதனால் 2 நாட்கள் விற்பனைக்கு பிறகு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கடலூர் மாவட்டத்திலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இருப்பினும் 2 நாட்களில் ரூ.13 கோடிக்கு மேல் மது விற்பனையானது.

இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுக்கடைகளை மூடுமாறு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

முன்னேற்பாடு

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவே அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபாட்டில்கள் குடோன்களில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் மதுபிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, டாஸ்மாக் பணியாளர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்தனர்.

கடைகள் திறப்பு

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் மது பிரியர்கள் உற்காகத்துடன் காலை 7.30 மணிக்கே கடலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வர தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அலைமோதியது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அவர்களை அங்குள்ள திறந்த வெளியில் அமர வைத்தனர்.

டோக்கன் வினியோகம்

அதன்படி மது பிரியர்கள் திறந்த வெளியில் அமர்ந்து இருந்தனர். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் முதலில் வந்த 500 பேருக்கு நீல நிற டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. இதை பெற்ற மது பிரியர்கள் அதனை வாங்கிக்கொண்டு அமர்ந்தனர்.

பின்னர் காலை 10 மணி ஆனதும் டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்தனர். அதையடுத்து முதல் 10 பேரை வரிசையில் நிற்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அவர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

ஒரு நபருக்கு 4 குவாட்டர் பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டது. தொடர்ந்து அதேபோல் மற்றவர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். நாளை (அதாவது இன்று) வழங்க வேண்டிய 500 டோக்கன்களையும் நேற்றே ஊழியர்கள் மதுபிரியர்களுக்கு வழங்கினர். இதை பெற்ற அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காலதாமதமாக வந்தவர்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆய்வு

முன்னதாக டாஸ்மாக் கடைகள் முன்பு போடப்பட்ட பாதுகாப்பு பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 143 டாஸ்மாக் கடைகளில் 126 கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. மற்ற கடைகள் சிகப்பு மண்டல பகுதியில் வருவதால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை. கடந்த முறை சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளில் கூடுதல் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றார்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற இடங்களிலும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்றது. இதை மதுபிரியர்கள் உற்சாகத்துடன் வாங்கி சென்றதை காண முடிந்தது. ஒரு சில கடைகளில் தேவையான அளவு மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கி சென்றதையும் பார்க்க முடிந்தது.

சானிடைசர்

வெயிலில் இருந்து தப்பிக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் சிலர் குடைபிடித்தபடி வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். சிலர் சாக்கு பை, வேப்ப இலை, ஹெல்மெட் அணிந்தபடியும் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்களை ஊழியர்கள் வழங்கினர். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்வதற்கும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்