தேர்தல் நடத்த முடியாவிட்டால் கிராம பஞ்சாயத்துகளின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம்

தேர்தல் நடத்த முடியாவிட்டால் கிராம பஞ்சாயத்துகளின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-05-16 23:59 GMT
பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கிராம சுவராஜ்ஜியம் மூலம் கிராமங்கள் வளர்ச்சி அடைய முடியும் என்று மகாத்மா காந்தி கூறினார். இந்த நிலையில் கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி, பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் முயற்சியின் பேரில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டு கிராம பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டன. இவை உள்ளூர் அரசாக செயல்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 6,024 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 97 ஆயிரத்து 70 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடரின்போது, சிறப்பான முறையில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்றி உள்ளனர்.

குடிநீர் பிரச்சினை

கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக கொரோனா வைரஸ் கிராமப்புறங்களில் தீவிரமாக பரவவில்லை. நகரங்களில் இருந்து மக்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு சென்றுள்ளனர்.

அவ்வாறு இருந்தும் குடிநீர் பிரச்சினையை தீர்த்தல், தூய்மையை பராமரித்தல் போன்ற பணிகளை கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சிறப்பான முறையில் செய்துள்ளது. இந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் நிறைவடைகிறது. அதனால் இந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு கட்டாயம் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பெயரில் இந்த தேர்தலை ஒத்திவைக்க அரசு முயற்சி செய்கிறது.

நீட்டிக்க வேண்டும்

மேலும் மாவட்ட கலெக்டர்கள் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு தனி அதிகாரிகள் மற்றும் நியமன உறுப்பினர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசு இவ்வாறு செய்தால் கொரோனாவை தடுப்பது கடினம். இதனால் கிராமப்புற கர்நாடகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

அதனால் கர்நாடக அரசு எக்காரணம் கொண்டு நியமன உறுப்பினர்களை நியமிக்கக்கூடாது. ஒருவேளை தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், தற்போது பதவியில் உள்ளவர்களின் பதவி காலத்தை அடுத்து தேர்தல் நடத்தும் வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் ஜனநாயகத்தின் விருப்பங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.”

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்