மன்னார்குடி அருகே இறந்து கிடந்த புள்ளி மான் வனத்துறை அதிகாரிகள் விசாரணை

மன்னார்குடி அருகே புள்ளி மான் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-05-16 23:42 GMT
மன்னார்குடி, 

மன்னார்குடி அருகே புள்ளி மான் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து கிடந்த புள்ளிமான்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த இடையர்நத்தம் கிராமத்தில் பாமணி ஆற்றங்கரையோரத்தில் செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டி உள்ளது. இந்த பகுதியில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.

இதுகுறித்து மன்னார்குடி வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இறந்து கிடந்த மானின் உடலில் இருந்த காயங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அந்த பகுதியிலேயே குழிதோண்டி மானை புதைத்தனர்.

விசாரணை

இந்த மான் இறந்து இரண்டு நாட்களாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பகுதிக்கு மான் எப்படி வந்தது? என்பது குறித்தும், மான் எப்படி இறந்தது? என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஜா புயலின் போது கோடியக்கரை பகுதியில் இருந்து இந்த மான் தப்பி வந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்