தேனி அருகே சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடைபயணமாக புறப்பட்டதால் பரபரப்பு

தேனி அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு செல்வதற்கு அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-16 06:15 GMT
தேனி,

தேனி அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு செல்வதற்கு அனுமதிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நடைபயணமாக செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமாநில தொழிலாளர்கள்

வடமாநிலங்களை சேர்ந்த தொழி லாளர்கள் பலர் கரும்பு வெட்டும் தொழிலுக்காக தேனி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரு கின்றனர். அதன்படி தேனி அருகே குன்னூரில் செங் குளம் கண்மாய் கரையோரம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் குழந்தைகளுடன் குடிசை அமைத்து தங்கி இருந்தனர்.

கடந்த ஒரு மாத காலமாக வேலையின்றி, வருமான மும் இன்றி அவர்கள் அங்கு வசித்து வந்தனர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று அங்கு குடிசைகளை அகற்றிக் கொண்டு, தொழிலாளர் கள் அனைவரும் 2 லாரிகளில் தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட முயன்றனர்.

நடைபயணம்

தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்றும், தங்களை சொந்த ஊருக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். லாரிகளின் சாவியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனால் போலீசாருக்கும் வடமாநில தொழிலாளர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தொழிலாளர்கள் நடைபயணமாக சொந்த ஊருக்கு செல்வதாக கூறி அங்கிருந்து கைக்குழந்தைகளுடன் புறப்பட்டனர். சுமார் 200 மீட்டர் தூரம் அவர்கள் நடந்து சென்ற நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது நடைபயணமாக சென்ற வட மாநில இளைஞர்களை போலீசார் தாக்கியதாக கூறி அவர்கள் போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

பின்னர் ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகர் அங்கு வந்தார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் பேசுகையில், “வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஓரிரு நாட்களில் சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள். அதுவரை உணவு, தங்கும் இட வசதி செய்து கொடுத்து, பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்” என்றார்.

இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வைகை அணை அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்ட னர்.

இதற்கிடையே வைகை அணை அருகே தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் 700-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த தொழிலாளர்களும் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் ரெயில் மூலம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதுவரை இங்கே தங்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்றுக் கொண்டு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்