மாவட்டம் முழுவதும் 145 மதுக்கடைகளை திறக்க ஏற்பாடு மதுப்பிரியர்களுக்கு வழங்க டோக்கன் தயார்
திண்டுக்கல் மாவட்டத்தில் 145 மதுக்கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு வழங்க டோக்கன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 145 மதுக்கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு வழங்க டோக்கன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் திறப்பு
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே கொரோனா பாதித்த பகுதிகளை தவிர்த்து இதர பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சுமார் 1½ மாதங்களுக்கு பின்னர் கடந்த 7-ந்தேதி மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 155 மதுக்கடைகள் உள்ளன. அதில் கொரோனா பாதித்த பகுதிகள், நெரிசல் மிகுந்த பகுதிகளை தவிர்த்து இதர இடங்களில் உள்ள 110 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து இடங்களிலும் மதுப்பிரியர்கள் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று மதுவாங்கினர்.
டோக்கன் தயார்
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் இதுதொடர்பான வழக்கில் மதுக்கடைகளை திறக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ஆனால், இந்த முறை சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்க இடவசதியுள்ள அனைத்து கடைகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 145 மதுக்கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் மதுபிரியர்களுக்கு வழங்க டோக்கன் அச்சிட்டு தயாராக வைக்கப்பட்டு உள்ளன.