ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் 65 கடைகள் திறப்பு

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் 65 கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-05-16 04:59 GMT
ஊட்டி,

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் 65 கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

மார்க்கெட் மூடல்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300 கடைகள் உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி மார்க்கெட் மூடப்பட்டது. அங்குள்ள காய்கறி, மளிகை, பழக்கடைகள் 2 திறந்தவெளி சந்தைகளுக்கு மாற்றப்பட்டன.

மார்க்கெட்டில் ரேஷன் கடைகள், மொத்த விற்பனை கடைகள், நாட்டு மருந்து கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் மளிகைக்கடை வியாபாரிகள் அதிக பொருட்களை எடுத்து வெளியே வைத்து விற்பனை செய்ய முடியாமல் இருந்தனர்.

65 கடைகள் திறப்பு

இதற்கிடையில் எலிகள் நடமாட்டத்தால் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண காலநிலையாலும் பொருட்கள் சேதம் அடைய தொடங்கியது. அதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து சமூக இடைவெளி விட்டு குறிப்பிட்ட கடைகள் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டில் சமூக இடைவெளி விட்டு சுழற்சி முறையில் 195 கடைகளை திறந்து காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த 48 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் மார்க்கெட்டில் உள்ள 65 கடைகள் திறந்து செயல்பட்டது.

குறியீடுகள்

இதற்கிடையில் நேற்று திறக்கப்பட்ட 65 கடைகளுக்கு ஏ குறியீடும், இன்று(சனிக்கிழமை) திறக்கப்படும் 65 கடைகளுக்கு பி குறியீடும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்பட உள்ள 65 கடைகளுக்கு சி குறியீடும் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் கடையின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏ குறியீடு ஒட்டப்பட்ட கடைகள் திறக்கப்படும் நாளில், மற்ற குறியீடு உள்ள கடைகள் திறக்கக்கூடாது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளி விட்டு மளிகை, பேக்கரி, தேயிலைத்தூள் விற்பனை, காலணி, சிறிய உணவகங்கள், துணிக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

அறிவுரை

முன்னதாக வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கடைகள் முன்பு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கை கழுவ தண்ணீர், கிருமிநாசினி அல்லது சோப்பு வைக்க வேண்டும். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் கோடுகள் அல்லது வட்டங்கள் தரையில் வரையப்பட வேண்டும். ஒருவர் வாங்கி சென்ற பின்னர் பின்னால் நிற்பவர் சென்று பொருட்கள் வாங்க வேண்டும். கடையில் கூட்டம் கூடக்கூடாது. இந்த நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்