மேட்டுப்பாளையத்தில் விபத்து மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; திரைப்பட இயக்குனர் பலி
மேட்டுப்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் திரைப்பட இயக்குனர் பரிதாபமாக இறந்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் திரைப்பட இயக்குனர் பரிதாபமாக இறந்தார்.
திரைப்பட இயக்குனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி மீனாட்சி அம்மாள். இவர்களுடைய 3-வது மகன் அருண் பிரசாத் (வயது 35). வெங்கடாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மீனாட்சி அம்மாள் அந்தப்பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அருண் பிரசாத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு சென்று சினிமா படவாய்ப்புகளை தேடி வந்தார். அப்போது பிரபல இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதையடுத்து நடிகர் விக்ரம் நடித்த ‘ஐ’ படத்தில் இயக்குனர் சங்கருக்கு முழு நேர உதவி இயக்குனராக அருண் பிரசாத் பணியாற்றினார். மேலும் தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 4 ஜி என்ற திரைப்படத்தை அருண் பிரசாத் இயக்கி வந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறாததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அருண் பிரசாத் அன்னூரில் தன்னுடைய வீட்டுக்கு வந்து, தாய் மீனாட்சி அம்மாளுடன் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அருண் பிரசாத், தன்னுடைய நண்பரை பார்க்க மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். பின்னர் மீண்டும் அன்னூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். மேட்டுப்பாளையம் புதிய மார்க்கெட் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி கண்இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் பிரசாத், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் சிறுமுகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருண் பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரியில் அருண் பிரசாத்தின் உடலை பார்த்து அவருடைய தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. திரைப்பட இயக்குனர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அன்னூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.