8 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நிவாரணமாக 8 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நிவாரணமாக 8 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
ஆலோசனைக் கூட்டம்
கொரோன தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவத் தொடங்கி சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2-ம் இடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட தீவிர விழிப்புணர்வு களப்பணிகளால் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இயற்கை பேரிடர்களை திறமையுடன் கையாண்டு மக்களை எவ்வித பாதிப்புகளில் இருந்தும் அ.தி.மு.க. அரசு பாதுகாக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது. தற்போது கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் இருந்து வெளியில் வருபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
கொரோனா இல்லாத மாவட்டம்
கோவையில் கொரோனா தாக்கம் இருந்ததால் 26 பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதில் தற்போது 23 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள 3 பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். தற்போது கோவை மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மண்டலமாக விளங்கி வருகிறது. கடந்த 2 வாரங்களாக யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். கோவை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8,184 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக இரவு, பகல் பாராது ஓயாது உழைத்த அனைவருக்கும் இதயப்பூர்வமான பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் தூய்மை பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள் என உள்ளாட்சித் துறையில் மட்டும் மொத்தம் 10,698 பணியாளர்கள் உள்பட அனைத்து துறையினரும் ஈடுபட்டனர்.
நிவாரண தொகை
கோவை மாவட்டத்தில் 9.76 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.96 கோடியே 66 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங் கப்பட்டு உள்ளன. அமைப்புசாரா தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 505 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவியாக ரூ.22 கோடியே 9 லட்சம் நிவாரணத்தொகை மற்றும் ரூ.3.50 கோடி மதிப்பில் நிவாரணப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், அதுவும் கோவை மாவட்டத்தில் தான், மகளிர் சுய உதவிகுழுக்களை கொண்டு மலிவு விலையில் முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் முழுவதும் 342 காய்கறி வாகனங்களில் வீடு வீடாக காய்கறிகள் விற்பனை செய்யவும், பொதுமக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க பஸ் நிலையங்களிலும் காய்கறி மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டன.
இலவச உணவு
கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5 லட்சம் பேர் சாப்பிட்டுள்ளனர். இதற்கான செலவுத் தொகை ரூ.43 லட்சத்தை கோவை புறநகர், மாநகர அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும்.
நல்லறம் அறக்கட்டளையின் 300 தன்னார்வலர்கள் மூலம் குமரன் கார்டன், விக்னேஸ் மஹால், பேரூர் நகரத்தார் திருமண மண்டபம் உள்பட 8 பகுதிகளில் சமுதாயக்கூடம் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் தேவை அடிப்படையில் மலைகிராமங்கள் முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு 1½ லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை சுமார் 27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பு
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 8 லட்சம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி 5 கிலோ, டீத் தூள் 250 கிராம் உள்பட மொத்தம் 11 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் முன்னின்று பணியாற்றி வரும் தூய்மை மற்றும் சுகாதாரப்பணியாளர்கள், போலீசார் என மொத்தம் 19,450 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.