மராட்டியத்தில் தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரின் உடலை குளக்கரையில் எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு - பாதி எரிந்த நிலையில் வேறு இடத்திற்கு மாற்றம்
மராட்டிய மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரின் உடலை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதி எரிந்த நிலையில் உடலை வேறு இடத்திற்கு மாற்றி எரித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே சிறுமலை அடிவாரம், சாமியார்பட்டி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளக்கரையில் நேற்று அதிகாலை புகை மூட்டமாக காணப்பட்டது. உடனே பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். குளக்கரையில் வைத்து பிணத்தை 2 பேர் எரித்து கொண்டிருந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை எரிப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது.
இதுகுறித்து அம்பாத்துரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடலை எரித்தவர்கள் தொப்பம்பட்டி ஊராட்சியில் பிணம் எரிக்கும் பணியாளர்கள் என்றும், இறந்தவர் ராமசாமி மகன் மாரிமுத்து (வயது 43) என்றும், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை சம்பந்தமாக மராட்டிய மாநிலம் புனேக்கு சென்றவர், அங்கேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும், அவருடைய உடலை ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து, குளக்கரையில் வைத்து எரித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து குளப்பகுதியில் உடலை எரிக்கக் கூடாது. வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாதி எரிந்த நிலையில் இருந்த அவருடைய உடலை உறவினர்கள் எடுத்துச் சென்று தங்களது சொந்த இடத்தில் வைத்து தகனம் செய்தனர். குளத்தில் பிணம் எரித்த இடத்தை ஊராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்து, பிளச்சிங் பவுடர் தெளித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.