மும்பை, சென்னையில் இருந்து வந்தவர்கள்: மதுரையில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 9 பேருக்கு கொரோனா - குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89-ஆக உயர்வு
மதுரையில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 9 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மும்பை, சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
மதுரை,
மதுரையில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 124-ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 3 பேர் மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மற்ற 6 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இவர்களில் ஒருவர் மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த 47 வயது நபர். சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் சமீபத்தில் வீடு திரும்பிய நிலையில் தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவர் மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த 37 வயது வாலிபர். இவர் சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த இவருக்கு தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன. இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் மற்ற 7 பேர் மும்பையில் தங்கி வேலை பார்த்தவர்கள். இவர்கள் மதுரை ஆரப்பாளையம், மேலூர், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து மதுரை வந்துள்ளனர். அவர்களுக்கு முதற்கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என வந்தது. இருப்பினும் அவர்கள் முகாம்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு 2-ம் கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் தற்போது கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்தது.
கொரோனா சிகிச்சை முடிந்து ஏற்கனவே 85 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை செல்லூர், ஜெய்ஹிந்த்புரம், எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89-ஆக உயர்ந்தது.