திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள ‘ஆன்லைன்’ வகுப்புகள்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள வசதியாக ‘ஆன்லைன்’ மூலம் தங்களை தயார்படுத்திக்கொள்ள பிரத்யேக இணையதள வசதியும் உருவாக்கப்பட்டு உள்ளது.
திருச்சி,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள வசதியாக ‘ஆன்லைன்’ மூலம் தங்களை தயார்படுத்திக்கொள்ள பிரத்யேக இணையதள வசதியும் உருவாக்கப்பட்டு உள்ளது.
உயர்கல்வித்துறை உத்தரவு
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை, மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகளை நடத்துவதற்கும், தேர்விற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கான அறிவுரைகளையும் காணொலி காட்சி மூலம் விளக்கும்படி அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த 11 மற்றும் 12-ந்தேதிகளில் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட கல்லூரி அதிபர்கள் மற்றும் துறை தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஒரு கருத்தரங்கை (வெபினார்) நடத்தியது. இது தொடர்பாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் கோபிநாத் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரத்யேக இணையதளம்
பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் மின் கற்றலை ஊக்குவிக்க தேவையான டிஜிட்டல் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்காக இ-உள்ளடக்கங்கள் மற்றும் டிஜிட்டல் ஆய்வு பொருட்களை பார்க்க ஒரு பிரத்யேக தனித்துவமான மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதான இ.டி.சி. என்கிற இணையதளத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் ஆசிரியர்களிடம் இருந்து பாடங்களை ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்ள முடியும். செமஸ்டர் தேர்வுக்கும் தங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும். இந்த இணையதளத்திற்கான வலை இணைப்பு http://oms.bdu.ac.in/ec ஆகும்.
வினா வங்கி வசதி
பல்கலைக்கழகத்தின் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதன் மூலம் இணைப்பு கல்லூரிகளுக்கு அவற்றின் வளாகத்தில் எந்தவொரு டிஜிட்டல் உள்கட்டமைப்பு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மேலும் எந்தஒரு பணத்தையும் செலவிடவேண்டியதும் இல்லை. ஏனென்றால் பல்கலைக்கழகம் இதனை ஒரு சேவையாக விரிவு படுத்தி உள்ளது.
இதன் மூலம் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களது வீடுகளில் இருந்தோ அல்லது வெளியிடத்தில் இருந்தோ எந்த நேரத்திலும் அணுக முடியும். மேலும் கல்லூரிகள் தங்களுக்கு விருப்பமான எந்த ஒரு கருவியையும் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. முடிக்கப்படாத பாட திட்டங்களுக்கு மட்டும் அல்லாமல் முழு பாட திட்டங்களுக்கான வினா வங்கி வசதியும் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.