நீலகிரி மாவட்டத்தில், ஜவுளி உள்பட அனைத்து தனிக்கடைகளும் திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஜவுளி உள்பட அனைத்து தனிக்கடைகளும் திறக்கப்பட்டது.
ஊட்டி,
தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற இடங்களில் 34 வகையான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 4 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் 34 வகையான கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடைகள் காலை முதல் மாலை வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், மதியத்துக்கு பின்னர் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து காணப்படுகிறது. பல கடைகளில் பொருட்கள் வாங்க ஆட்கள் இல்லாததால் கடைகள் முன்கூட்டியே அடைக்கப்பட்டு வருகின்றன. இதனால் காலையில் பரபரப்பாகவும், மாலையில் வெறிச்சோடியும் கடைகள் காணப்படுகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கூறிய அறிவுரையின்படி நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர பிற பகுதிகளில் அனைத்து தனிக்கடைகளும் திறந்து செயல்பட கலெக்டர் அனுமதி அளித்தார்.
இதன்படி ஊட்டியில் நேற்று முதல் திறந்தவெளி சந்தைகள் மற்றும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகளோடு மற்ற தனிக்கடைகளும் திறக்கப்பட்டன.
ஊரடங்கால் பல நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால், கடைகளில் தூசி படிந்து இருந்தது. இதனால் பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்த பிறகு வியாபாரத்தை தொடங்கினர். குளிர்பிரதேசம் என்பதால் ஜவுளிக்கடைகளில் ஏ.சி. பொருத்தப்படவில்லை. இதனால் நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளிலும் ஜவுளிக்கடைகளும் திறந்து செயல்பட்டன. இருப்பினும் ஜவுளி விற்பனை மந்தமாக இருந்தது. சில கடைகள் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்க இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஊட்டியில் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. சாலையோரங்களில் இருசக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளது. வழக்கமாக கோடை சீசனான மே மாதம் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி நகரிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் உள்ளூர் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல் உள்ளது.