குமரியைச் சேர்ந்த கொத்தனார் கொரோனாவுக்கு பலி

துபாயில் கொரோனாவுக்கு குமரியை சேர்ந்த கொத்தனார் பலியானார்.

Update: 2020-05-15 02:17 GMT
அருமனை, 

துபாயில் கொரோனாவுக்கு குமரியை சேர்ந்த கொத்தனார் பலியானார்.

கொத்தனார்

குமரி மாவட்டம் அருமனை அருகே குழிச்சல் மாறப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 48), கொத்தனார். இவருடைய மனைவி லதா புஷ்பம். இவர்களுக்கு பியூட்டிலின் ரென்சி (20) என்ற மகளும், அட்லின் ராகுல் (18) என்ற மகனும் உள்ளனர். லதா புஷ்பம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இந்த நிலையில் ராஜகுமார் 9 மாதங்களுக்கு முன் துபாய் நாட்டில் வேலை செய்வதற்காக சென்றார். இவர், அங்குள்ள அஜிமான் என்ற இடத்தில் வேலை செய்து வந்தார்.

கொரோனாவுக்கு பலி

துபாயில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் ராஜகுமார் வேலையில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ராஜகுமார் மகளிடம் பேசினார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து ராஜகுமார் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவர் இறந்து விட்டதாகவும், கொரோனா தொற்றே காரணம் என்றும் அங்கிருந்து தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் இறந்ததால், உடலை சொந்த ஊருக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை அறிந்ததும், ராஜகுமாரின் தாயார் ஞானம்மா மற்றும் மகன், மகள் கதறி அழுதனர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

மேலும் செய்திகள்