தாராவியில் கொரோனா பரவல் தீவிரமானது ஏன்? - பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது
தாராவியில் கொரோனா தீவிரமாக பரவி வருவதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
மும்பை,
தீவு நகரமான மும்பையின் வடக்குமுனையில் சுமார் 8 லட்சம் மக்கள் தொகையுடன் வெறும் 2.5 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது தாராவி. ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய குடிசை பகுதி, புலம்பெயர்ந்த தமிழர்களின் ‘குட்டி தமிழ்நாடு' என்றெல்லாம் அழைக்கப்படும் தாராவி தற்போது கொரோனா அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது.
மும்பை பெருநகரத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா புகுந்தது. ஆனால் தொழிலாளர்கள் நிறைந்த தாராவியில் இந்த கொடூர வைரஸ் நுழைந்தது என்னவோ சற்று தாமதமாகத்தான். கடந்த மாதம் 1-ந் தேதி தான் தாராவியில் தடம் பதித்த கண்ணுக்கு தெரியாத பெருந்தொற்று கண்டறியப்பட்டது. பாலிகா நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி கண்டறியப்பட்டார்.
1,000-ஐ கடந்தது
அப்போதே தாராவிக்கு கொரோனா எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. இங்கு கொரோனா சமூக பரவலாக மாறிவிடாமல் இருப்பதற்கு மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் பலனாகவோ என்னவோ 15 நாட்களில் பரவல் வேகம் காட்டவில்லை.
ஆனால் ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் தொற்று பரவல் வேகமெடுத்தது. இதனால் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இந்த மாதம் 3-ந் தேதி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்தது.தற்போது மூலை முடுக்கெல்லாம் புகுந்து கொரோனா தாராவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த குடிசைப்பகுதியில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது. இதில் 40 பேரின் உயிரை பெருந்தொற்று பறித்துள்ளது. மாய்ந்தவர்களில் தமிழர்களும் அடங்குவார்கள்.
காரணம் என்ன?
தாராவியில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதற்கான காரணம் குறித்து தாராவி புனர்விகாஸ் சமிதி தலைவர் ராஜூ கோர்டே கூறுகையில், “இங்கு சிறு சிறு அளவிலான வீடுகள் மிகவும் நெரிசலாக அமைந்துள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கு முன்னாலும் மிக குறுகிய பாதைகள் தான் உள்ளன. இங்கு சமூகவிலகலை கடைபிடிப்பது என்பது சாத்தியமில்லாதது. இதேபோல வீடுகள் குருவி கூடுகளை போல உள்ளதால் தனிமைப்படுத்தி கொள்ளுதல் என்பதும் சாத்தியமற்றது” என்றார்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “தாராவியில் மராட்டிய வீட்டு வசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தால் 450 பொது கழிப்பறைகள் உள்ளன. நூற்றுக்கணக்கான மக்கள் பொதுகழிப்பறைகளை பயன்படுத்துவதால் கொரோனா வேகமாக பரவுவதற்கான ஆபத்து உள்ளது. எனவே கழிப்பறைகளை தவறாமல் சுத்தம் செய்து வருகிறோம்” என்றார்.
கால் வைக்கும் இடமெல்லாம் தொற்று நோய் பாதித்த பகுதியாக தாராவி மாறி இருப்பதால், கொடிய கொரோனாவிடம் அகப்பட்டு விடாமல் இருப்பதற்காக தாராவியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் போன்ற வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகிறாார்கள்.