கோவில் வளாகத்தில் மட்டுமே சுற்றிவந்த கெங்கையம்மன் சிரசு - நள்ளிரவு 1½ மணி நேரத்தில் விழா முடிந்தது

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்திலேயே அம்மன்சிரசு சுற்றிவந்து நள்ளிரவு 1½ மணி நேரத்தில் விழா முடிந்தது.

Update: 2020-05-14 17:25 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் வேலூர் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் வட மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட ஒரே திருவிழா கெங்கையம்மன் சிரசு திருவிழா மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 16-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் கடைசி நாள் தேரோட்டமும், வைகாசி 1-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறும். அன்று மாலையில் மிக பிரம்மாண்டமான வாணவேடிக்கையும் நடைபெறும்.

திருவிழாவுக்காக குடியாத்தம் நகரம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருக்கும். எப்போதும் விழாக்கோலத்தில் இருக்கும் கெங்கையம்மன் கோவிலை ஒட்டியுள்ள கவுண்டன்ய மகாநதி ஆற்றில் திருவிழாவுக்கு முன்னதாகவே நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டிருக்கும். திருவிழா முடிந்து 15 நாட்களுக்கும் மேலாக கடைகள் இருக்கும். திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை, இந்து சமய அறநிலையத் துறை, நகராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு முன்னதாகவே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இவ்வளவு முக்கியமான கெங்கையம்மன் திருவிழா நேற்று நடைபெற்றது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தடை உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா தடைப்படும் நிலையிலிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து திருவிழா நடத்த அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் குறைந்த அளவு கோவில் பணியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை கொண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தார். இதனையடுத்து நேற்று நள்ளிரவு சுமார் 2 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் சிரசு வீதிகளுக்கு செல்லாமல் கோவிலின் உள்பகுதியில் வலம் வந்தது. தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் கெங்கை அம்மன் சிரசு பொருத்தப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பின்பு சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து கெங்கை அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. சுமார் 1½ மணி நேரத்தில் திருவிழா நிகழ்வுகள் முடிவு பெற்றது.

நிகழ்ச்சிகளில் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், குடியாத்தம் தாசில்தார் வத்சலா, நகராட்சி ஆணையாளர் ரமேஷ், ஊர் நாட்டாண்மை சம்பத் உள்பட ஒரு சிலரே கலந்துகொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், விழா சிறப்பு அதிகாரி மாதவன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.

வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கோவில் அருகே உள்ள தெருக்களின் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு வராதவண்ணம் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வர ஆர்வமாக இருந்த நிலையில் தடைகள் அமைக்கப்பட்டிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

மேலும் செய்திகள்