ஊரடங்கு நீட்டித்தாலும் அரசு பஸ்கள் இயக்கப்படுமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
ஊரடங்கு நீட்டித்தாலும் அரசு பஸ்கள் இயக்கப்படுமா? என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 8 பேரில், 7 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றொருவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.
மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையுடன் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்ததால், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்றால், அவர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையக்கூடாது, தொழிற்சாலைகள் நஷ்டம் அடையக்கூடாது என்பதற்காக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொழில்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமான எதிர்பார்ப்புகள் குறித்த அறிவிப்புகளை பிரதமர் நரேந்திரமோடி உரிய நேரத்தில் அறிவிப்பார்.
கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன், அரசு முன்னோக்கி செல்ல வேண்டிய துறையில் பின்னோக்கி செல்வதாகவும், பின்னோக்கி செல்ல வேண்டிய துறையில் முன்னோக்கி செல்வதாகவும் கூறி உள்ளார். அவர் எந்த துறையை ஆய்வு செய்தார்? என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் துறை எப்படி முன்னோக்கி செல்கிறது என்பது எங்களுக்கு தெரியும். அரசு துறைகள் முன்னோக்கி செல்கின்ற காரணத்தினால்தான், நடிகர் கமல்ஹாசன் தயாரித்த இந்தியன்-2 திரைப்படத்துக்கான போஸ்ட் புரோடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஊரடங்கில் திரைப்படத்துறையினர் போஸ்ட் புரோடக்சன் பணிகளுக்கு அனுமதி கேட்டதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு எடுத்து சென்றேன். அவர் ஒரே நாளில் இதற்கு அனுமதி தந்ததால்தான், அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது முன்னேற்றமா? பின்னேற்றமா? என்பதை நடிகர் கமல்ஹாசன்தான் கூற வேண்டும். இதேபோன்றுதான் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டுக்கே முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது. நடிகர் கமல்ஹாசனை பற்றி எடை போடுவதற்கு அவரது கருத்துகளே போதுமானது.
அரசு பஸ்கள்
அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நீண்ட நாட்களாக இயக்கப்படாத பஸ்களை இயக்கி பழுது நீக்கி பராமரித்து வருகின்றனர். கால அவகாசம் இருப்பதால், ஊரடங்கு நீட்டித்தாலும் பஸ்களை இயக்குவது குறித்து அரசு உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.