மும்பை, சென்னையில் இருந்து மதுரை வந்த 2 வாலிபர்களுக்கு கொரோனா
மும்பை, சென்னையில் இருந்து மதுரை வந்த வாலிபர்கள் 2 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை,
மதுரையில் கொரோனா பாதிப்பு 122-ஆக இருந்த நிலையில் நேற்று மதுரையைச் சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் மேலூர் அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த வாலிபர்.
மும்பையில் தங்கி வேலை செய்து வந்த இவர், கடந்த 11-ந் தேதி மதுரை மேலூருக்கு வந்தார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
மற்றொருவர் கொட்டாம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தார். இந்த நிலையில் இவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவரும் தற்போது கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இது போல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மதுரை செல்லூர், மேலமாசி வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85-ஆக உயர்ந்தது.