ராமநாதபுரம் மாவட்டத்தில், கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-05-14 07:34 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 30 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்தநிலையில் நேற்று ஒரு பெண் உள்பட 3 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 21 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் யாரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும், பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 3 பேரும் என மொத்தம் 8 பேர் தற்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 205 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 204 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்றும், பரமக்குடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு மட்டும் நோய்த்தொற்று உள்ளதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 31 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் 246 பேருக்கும், பரமக்குடியில் 17 பேருக்கும் பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் மட்டுமே வர வேண்டியது உள்ளது. மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்