ஏப்ரல் மாதத்துக்கான உயர் அழுத்த மின்கட்டணத்தை செலுத்த நிர்பந்திக்கக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஏப்ரல் மாதத்துக்கான உயர் அழுத்த மின் கட்டணத்தை செலுத்தும்படி நிர்பந்திக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
உயர் அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்கு மின் பளு அளவுக்கு தனி கட்டணமும், பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு தனி கட்டணமும் வசூலிக்கப்படும். தற்போது ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் நூற்பாலைகளில் உற்பத்தியானது நிறுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான பராமரிப்பு பணி, மின் விளக்குகள், பாதுகாப்பு பணி ஆகியவற்றுக்குத்தான் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
வேலை முடக்கம் செய்யப்பட்டுள்ள காலத்தில் மின்பளு அளவுக்கான கட்டணத்தில் 20 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மின்வாரிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மின் ஒழுங்குமுறை ஆணையமும் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இந்த விதிமுறையை மீறி மின்பளு அளவுக்கான கட்டணத்தில் 90 சதவீதத்தை செலுத்துமாறு மின்வாரியத்தில் இருந்து ரசீது அனுப்பப்பட்டு உள்ளது. இந்த ரசீதுகளை திரும்ப பெற்று 20 சதவீத கட்டணத்துடன் புதிய ரசீது அனுப்ப உத்தரவிட வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை உயர் அழுத்த மின் இணைப்புக்கு 90 சதவீத கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “20 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற மின் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மின்வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மின்வாரியம் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை உயர் அழுத்த மின் இணைப்பு வாடிக்கையாளர்களை ஏப்ரல் மாதத்துக்கான மின்கட்டணத்தை செலுத்துமாறு நிர்பந்திக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.