வாகனங்களின் தகுதிச்சான்றை புதுப்பிக்க செப்டம்பர் மாதம் வரை அவகாசம் வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், டிரைவர்கள் மனு
வாகனங்களின் தகுதிச்சான்றை புதுப்பிக்க செப்டம்பர் மாதம் வரை அவகாசம் தர வேண்டும் என்று டிரைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாகர்கோவில்,
வாகனங்களின் தகுதிச்சான்றை புதுப்பிக்க செப்டம்பர் மாதம் வரை அவகாசம் தர வேண்டும் என்று டிரைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுந்தரம் மற்றும் திரளான ஓட்டுனர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கால் டாக்ஸி, ஆட்டோ, மேக்சி கேப் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளோம். எனவே வாகனங்களின் தவணைகளை மேலும் 3 மாத காலத்திற்கு வசூலிக்கக் கூடாது. அந்த காலங்களில் வங்கி கணக்குகளில் தவணை தொகைகளுக்கான காசோலைகளை செலுத்தி செக் பவுன்ஸ் அபராதம் எந்த வங்கிகளும் வசூலிக்க கூடாது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.
சுங்கச்சாவடிகள்
ஏற்கனவே காலாவதியான வாகனங்களில் தகுதிச்சான்று, பெர்மிட், லைசென்ஸ் ஆகியவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். விரைவில் குறைந்த பயணிகளுடன் டாக்ஸி, ஆட்டோ, மேக்சி கேப்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பேட்ஜ் லைசென்ஸ் வைத்துள்ள அனைத்து ஓட்டுனர்களுக்கும் தமிழக அரசு நிவாரண தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுமக்கள் பெரும் பொருளாதார பின்னடைவில் இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் குறைந்தபட்சம் 3 மாதம் மூட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.