திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டும் பொதுமக்கள்
திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். இதனால் இந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாய நிலை உருவாகி வருகிறது.
கொரோனா வைரஸ்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலால், தினமும் எண்ணற்றவர்கள் இறப்பதும், பலருக்கு வைரஸ் தொற்று பரவி வருவதும் அன்றாட நிகழ்வுகளாக உள்ளன. இதனையொட்டி இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் அவ்வப்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அலட்சியம்
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியில் வரும்போது முக கவசம் அணியாமலும் பொது இடங்களில் கூடும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர், குறிப்பாக காய்கறி கடைகள், ரேசன் கடைகள், மீன் மார்க்கெட்டுகள், பால் டெப்போக்கள் போன்றவற்றில் இந்த நிலை தொடர்கிறது.
அரசின் அறிவுரைகளை கடைபிடிக்க...
இவை தவிர, சென்னை மற்றும் வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளவும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அரசின் சார்பில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அதனையும் பெரும்பாலானோர் அலட்சியப்படுத்தி விட்டு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமலும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமலும் வாகனங்களில் வலம் வந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. எனவே இனிமேலும் அலட்சியம் காட்டாமல் அரசு அறிவுறுத்தியபடி முக கவசம் அணிந்து வெளியில் வருவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களையும், சமூகத்தையும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காற்றில் பறக்கும் அரசு உத்தரவு
இதேபோல் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும். கூட்டமாக நிற்காமல் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை பெற்றுச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள்தான் கண்ணுக்கு தெரிகிறதே தவிர கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்து கண்ணுக்கு தெரிவதில்லை. அரசின் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்தி விட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டும் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதைப்பார்க்கும்போது பொதுமக்களே கொரோனாவை விருந்து வைத்து வரவேற்பது போல் உள்ளது என்று விவரம் தெரிந்தவர்கள் அங்கலாய்த்தபடி சென்றதை பார்க்க முடிந்தது.