சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: காட்டூர்-தட்டமஞ்சி ஏரிகளை இணைத்து 6-வதாக புதிய நீர்த்தேக்கம்
சென்னை மாநகரின் நிரந்தர குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக மீஞ்சூர் அருகில் உள்ள காட்டூர் மற்றும் தட்டமஞ்சி ஆகிய ஏரிகளை இணைத்து ரூ.62 கோடியில் 6-வதாக புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட உள்ளது.
மீஞ்சூர்,
சென்னை மாநகரில் கடந்த 2013-ம் ஆண்டு 77 லட்சமாக இருந்த மக்கள் தொகை படிப்படியாக உயர்ந்து 2019-ம் ஆண்டு 1 கோடியே 6 ஆயிரத்து 392 என்ற அளவில் உள்ளது. நடப்பாண்டு மேலும் உயர்ந்து வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை 11 ஆயிரத்து 257மில்லியன் கன அடி (11.257 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வாய் கண்டிகை பெரிய ஏரியையும், அருகே உள்ள கண்ணங்கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்து 1,495.64 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.330 கோடியில், ஆயிரம் மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் வகையில் 5-வது புதிய நீர்த்தேக்கம் உருவாக்கும் பணியை 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய முதல்-அமைச்சரான மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார். நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த பணியில் சற்று தொய்வு ஏற்பட்டு தற்போது நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ளது.
6-வது நீர்த்தேக்கம்
இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இப்பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதால் கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மீஞ்சூர் தாலுகாவில் குடிநீர் தேவை அதிகரிப்பதால் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து பொன்னேரி தாலுகா மீஞ்சூர் அருகே உள்ள காட்டூர் மற்றும் தட்டமஞ்சி ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து 6-வதாக புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது.
அத்துடன் இப்பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்கான பணிகளும் நடக்க உள்ளது. இதன் மூலம் 58 மில்லியன் கன அடியாக உள்ள இந்த ஏரிகளின் நீர் இருப்பு 350 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும். இதன் மூலம் ஆரணியாற்றில் இருந்து திறக்கப்படும் 1.76 டி.எம்.சி. உபரி நீர் கடலுக்கு செல்லாமல் தடுக்கப்படுகிது. இந்த ஏரிகளில் இருக்கும் உபரி நீரை வெளியேற்றும் வகையில் 600 கன அடி அளவில் கால்வாய்கள் புதிதாக அமைக்கப்படுகிறது.
ரூ.62 கோடி நிதி
இந்த ஏரிகள் அடுத்தடுத்து அமைந்து இருப்பதால் பெரிய அளவில் நிலஎடுப்பு எடுக்க வேண்டியது இல்லை. இந்த புதிய நீர்த்தேக்கத்துக்காக புதிதாக மதகுகள், வரத்து கால்வாய்கள் மட்டும் மேம்படுத்தப்படுகிறது. குடிநீருக்காக அங்கு நீரேற்றும் நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த நீர்தேக்கம் அமைக்கப்படுவதன் மூலம் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீரும். அதேபோல் நீரின் தரமும் உயரும்.
இந்த திட்டம் நபார்டு வங்கியின் ரூ.55.7 கோடி நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.6.5 கோடியில் மாநில அரசு நிதி விடுவிக்கப்படுகிறது. அதன்படி ரூ.62.2 கோடி மதிப்பில் பணி நடக்க உள்ளது.
இதில் ரூ.38 கோடி நீர்த்தேக்க கட்டுமான பணிக்கும், ரூ.11.7 கோடி கடல்நீர் உட்புகுதலை தடுக்க சுவரும், 15 இடங்களில் ரூ.41 லட்சம் செலவில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகளும் அமைக்கப்படுகிறது. ரூ.3.6 கோடியில் நிலம் கையகப்படுத்தப்படுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.