சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1,152 மதுபாட்டில்கள் பறிமுதல்: டாஸ்மாக் பணியாளர்கள் உள்பட 6 பேர் கைது
காங்கேயத்தில் சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1,152 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காங்கேயம்,
காங்கேயத்தில் சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1,152 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள் 2 பேர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார், வேன் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் காங்கேயத்தில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தனராசு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு காங்கேயம்-திருப்பூர் ரோட்டில் உள்ள ஹாஸ்டல் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த நிலையில் ஒரு சரக்கு வேன் அந்த வழியாக வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சரக்கு வாகனத்தில் அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து அந்த சரக்கு வேனை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் காங்கேயத்தை சேர்ந்த மகேஷ்ஜெயக்குமார் (வயது 45) காங்கேயம் நகர தி.மு.க. பொருளாளர் என்பதும், பனியன் கம்பெனி நடத்தி வருவதும் தெரியவந்தது. எனவே, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது காங்கேயத்தில் உள்ள தனது பனியன் குடோனில் வைத்து விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மகேஷ்ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த மது பாட்டில்கள் கடத்தலில் சம்பந்தப்பட்ட திருப்பூர் பாண்டியன் நகர் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் திருமூர்த்தி (41), காங்கேயம் அர்த்தனாரிபாளையம் டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் ஜேகதீஸ் (45) மற்றும் சரவணகுமார் (31), நவீன் (30) பால்ராஜ்(35) ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் 6 பேரும் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் 2 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டது. அதன்பின்பு கோர்ட்டு உத்தரவுப்படி மீண்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து 2-வது நாள் கடை திறக்கப்பட்ட அன்று இரவில், திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் மற்றும் காங்கேயம் அருகே ஓட்டபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஆகிய 2 கடைகளில் இருந்து இந்த கும்பல் சட்டவிரோதமாக அங்குள்ள பணியாளர்களின் உதவியுடன் இந்த மதுபானங்களை வாங்கி வந்து, காங்கேயத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைத்துள்ளது. பின்னர் ஆங்காங்கே வாகனங்களில் கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் ஒன்றாக சேர்ந்து மதுபானங்களை வாங்கி இவ்வாறு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
இவ்வாறு மதுவிற்பனைக்கு வைத்திருந்த 24 அட்டை பெட்டிகளில் இருந்த மொத்தம் 1,152 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மகேஷ்ஜெயகுமாருக்கு சொந்தமான சரக்கு வேன், சரவணக்குமாருக்கு சொந்தமான கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் காங்கேயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.