தேனி மாவட்டத்தில், பெண்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு

தேனி மாவட்டத்தில் மேலும் 3 பெண்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-13 07:44 GMT
தேனி, 

தேனி மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி வரை 59 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் போடியை சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 42 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் 16 பேர் பெரியகுளம், ஜெயமங்கலம், கெங்குவார்பட்டி அருகில் உள்ள கோட்டார்பட்டி, ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சேடப்பட்டி, தேக்கம்பட்டி, ஓடைப்பட்டி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 3 பெண்கள் உள்பட 6 பேர் ஓடைப்பட்டியை சேர்ந்தவர்கள். மற்றொருவர் தேவதானப்பட்டியை சேர்ந்தவர்.

ஓடைப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய தெருவில் வசிக்கும் மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அதே தெருவில் வசிக்கும் 6 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தேவதானப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபருக்கு வயது 43. அவர் குஜராத்தில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வசித்து வந்த குடியிருப்பு பகுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரே நாளில் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்