களியக்காவிளை சோதனை சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வாகனங்களை அனுமதிக்க கூடாது சிறப்பு அதிகாரி கருணாகரன் உத்தரவு
களியக்காவிளை சோதனை சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வாகனங்களை அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு, சிறப்பு அதிகாரி கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
களியக்காவிளை,
களியக்காவிளை சோதனை சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வாகனங்களை அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு, சிறப்பு அதிகாரி கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு அதிகாரி
கொரோனா ஊரடங்கையொட்டி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். இதுதவிர குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்வோரையும், கேரளாவில் இருந்து குமரிக்கு வருவோரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர். இதற்கிடையே சுகாதார பணிகள், சோதனை சாவடியில் வாகன தணிக்கை குறித்த பணிகளை ஆய்வு செய்வதற்காக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கருணாகரன் நேற்று குமரி மாவட்டத்துக்கு வந்தார். அவருடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
அனுமதிக்க கூடாது
களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் உள்ள சுகாதாரத்துறை, காவல்துறை, துப்புரவு பணியாளர்களின் பணியினை சிறப்பு அதிகாரி பாராட்டினார். மேலும் எல்லையை கடந்து செல்வதற்கு இரு மாநிலங்களில் இருந்து யார் வந்தாலும் இ-பாஸ் இல்லாமல் அனுமதிக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறினார். மேலும் தெர்மா மீட்டர் சரியாக வேலை செய்கிறதா? என்று பார்த்தார். எல்லையை கடந்து செல்லும் வாகனங்கள் கணக்கீடு செய்யும் பதிவேட்டை வாங்கி பார்த்தார்.
கொரோனா முடிவு
பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறுகையில், மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் வந்துள்ள 147 பேர் குமரி மாவட்டத்தில் பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு கொரோனா முடிவு வந்துள்ளது. அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு தனி பஸ்சில் அனுப்பி வைத்துள்ளோம். மீதமுள்ளவர்களுக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியது உள்ளது. முடிவுகள் வந்தவுடன் அவர்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.