தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-05-13 00:39 GMT
பொறையாறு, 

தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நெல் சாகுபடி பணி தொடக்கம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மீன்பிடி தொழிலும், விவசாய தொழிலும் பாதிக்கப்பட்டன.

இந்தநிலையில் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் செம்பனார்கோவில், பரசலூர், சங்கரன்பந்தல், கீழையூர், ஆக்கூர், கீழ்மாத்தூர், மேமாத்தூர், நல்லாடை, கீழையூர், காளகஸ்திநாதபுரம் ஆகிய சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தற்போது நிலத்தடி நீரை கொண்டு கோடை கால குறுவை நெல் சாகுபடி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆக்கூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

நிவாரணம் வழங்க வேண்டும்

ஊரடங்கால் உழவு மற்றும் நடவு பணிகள் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்கிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த பணி மூலம் விவசாய கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெருக்க வழிவகுக்கும். சமூக இடைவெளி விட்டு பெண்கள் நடவு செய்து வருகின்றனர்.

மேலும் மரவள்ளி கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, நிலக்கடலை, சோளம், கம்பு, பருத்தி, புடலங்காய், பாகற்காய், கொத்தவரங்காய், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், உளுந்து, பச்சைபயறு உள்ளிட்டவை அறுவடை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் காய், கனி செடிகள் கருகி வருகிறது. எனவே தமிழக அரசு, விவசாயிகளுக்கு கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்