கொரோனா தடுப்பு, நிவாரண பணிகள் குறித்து கர்நாடக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
கொரோனா தடுப்பு, நிவாரண பணிகள் குறித்து கர்நாடக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அந்த பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலை நடத்தாவிட்டால், 6 மாத காலத்திற்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்க சட்டத்தில் அவகாசம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த பா.ஜனதா தயாராகி வருகிறது.
இதுபற்றி எங்களுக்கு தகவல் வந்துள்ளது. தற்போது நீடித்து வரும் கொரோனா நெருக்கடியில் கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை. அதனால் 6 மாதங்களுக்கு கிராம பஞ்சாயத்து தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். தற்போது பதவியில் உள்ளவர்களின் பதவி காலத்தை அதுவரை நீட்டிக்க வேண்டும். தொழிலாளர்கள் தான் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
உணவு தானியங்கள்
நெருக்கடியான இந்த தருணத்தில் அந்த தொழிலாளர்களுக்கு இந்த அரசு உணவு தானியங்களை சரியான முறையில் வழங்கவில்லை. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அவர்கள் சரியான முறையில் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். அரசு நிவாரண பொருட்கள் மீது பா.ஜனதாவினர் தங்களின் புகைப்பட ஸ்டிக்கரை ஒட்டி வினியோகம் செய்துள்ளனர்.
உண்மையான தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை. 5.50 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். இதில் எத்தனை பேரை அவர்களின் ஊருக்கு இந்த அரசு அனுப்பி வைத்துள்ளது. இதுவரை எத்தனை தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள், இலவச பால் வழங்கப்பட்டது என்பது பற்றி அரசு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
வெள்ளை அறிக்கை
கொரோனாவை தடுக்கும் பணிகள் மற்றும் நிவாரண பணிகளை சரியான முறையில் நிர்வகிப்பதில் மாநில அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது. எல்லா விஷயங்களிலும் அவசரகதியில் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். தகவல், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க அனுமதிப்பதிலும் குழப்பம் நிலவியது.
தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதில் அரசு குழப்பத்தில் இருந்தது. அதனால் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கர்நாடக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு இதுவரை உதவி செய்யவில்லை. 13 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் கர்நாடகத்திற்கு நிதி உதவியை வழங்கவில்லை. கர்நாடகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.