சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்ககோரி போலீஸ் ஜீப்பை சிறைபிடித்து வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி போலீஸ் ஜீப்பை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் கல்வீசி தாக்கியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.
பூந்தமல்லி,
ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த வடமாநில தொழிலாளர்கள், தமிழக அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். சென்னை போரூரில் தனியார் நிறுவன கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் 800-க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் போரூர், துரைசாமி நகர் பகுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று மாலை அங்கு ஒன்று திரண்ட வடமாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்ககோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போரூர் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த வடமாநில தொழிலாளர்கள், போலீஸ் ஜீப்பை சிறைபிடித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கையில் இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்டவைகளால் போலீசார் மற்றும் ஜீப்பை தாக்க முற்பட்டனர். கூட்டத்தில் இருந்த சிலர் கல் வீசி தாக்கியதால் போலீசார் அங்கிருந்து சிதறி ஓடினர். எனினும் கல்வீச்சில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வடமாநில தொழிலாளர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த இந்தி தெரிந்த ஒருவரை வைத்து ஒலிபெருக்கி மூலம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், அனைவரையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு வடமாநில தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் அடிக்கடி இதுபோல் போராட்டம் நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.