திருப்பூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் சென்ற 1,464 தொழிலாளர்கள்: கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

திருப்பூரில் இருந்து பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழியனுப்பி வைத்தார்.

Update: 2020-05-12 23:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை போன்று, வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பலர் இங்கு தங்கி பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள்.

தற்போது திருப்பூரில் ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருவதால், மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழக தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டார்கள். ரெயில் வசதி இல்லாததால் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கியிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் பனியன் நிறுவனங்கள் இயங்காததால் தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு கடந்த மாதம் 28-ந்தேதி வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அறிவித்தது. இதன் பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தங்கள் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து சொந்த ஊருக்கு செல்வதற்கு பதிவு செய்தனர். மேலும், பலர் இணையதளம் மற்றும் செல்போன் மூலமாகவும் பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்து பீகார் முஜாப்பூர் நகர் வரை செல்லும் சிறப்பு ரெயில் கடந்த 10-ந்தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பீகாரை சேர்ந்த தொழிலாளர்களுக்காக முதற்கட்டமாக இந்த ரெயில் இயக்கப்பட்டது. இதில் உடுமலை சைனிக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் உள்பட 1,140 பேர் சிறப்பு ரெயிலில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இதற்கிடையே பீகார் தொழிலாளர்களுக்காக 2-ம் கட்டமாக திருப்பூரில் இருந்து பீகார் மாநிலம் ஹாஜ்பூர் நகர் செல்ல நேற்று சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதற்காக டோக்கன்பெற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளிக்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் அமரவைக்கப்பட்டனர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டோக்கன் கொடுத்து ரெயில் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். அவர்கள் வரிசையாக ரெயில் நிலையம் சென்றனர். இதன்படி பீகாருக்கு பயணம் செல்ல பதிவு செய்த பெண்கள் உள்பட 1,464 தொழிலாளர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

ரெயில் நிலையம் வந்த வடமாநில தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த பரிசோதனையில் 100 டிகிரிக்கும் குறைவாக உள்ள தொழிலாளர்கள் மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். மேலும், ரெயிலில் பயணம் செய்யும் தொழிலாளர் களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

இதற்கிடையே திருப்பூர் ரெயில் நிலையத்தில் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் மதியம் 1.20 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. பீகார் சென்ற வடமாநிலத்தவர்களை கலெக்டர் விஜயகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் வழியனுப்பிவைத்தார்.

இந்த நிலையில் திருப்பூரில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக தேர்வு செய்து டோக்கன் வழங்கும் பணி பிச்சம்பாளையத்தில் உள்ள பள்ளியில் நடந்து வந்தது. இதற்காக குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமே அழைக்கப்பட்டனர். ஆனால் சிலர் தங்களையும் சிறப்பு ரெயிலில் பீகாருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கோரி பிச்சம்பாளையம் பகுதிக்கு வடமாநில தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டினர்.

மேலும் செய்திகள்