கொரோனா ஊரடங்கால் தாளம் மறந்த மேளக் கலைஞர்கள் - நிவாரண உதவி வழங்க கோரிக்கை

கொரோனா ஊரடங்கால் மேளக்கலைஞர்கள் தாளம் மறந்தனர். எனவே வறுமையில் சிக்கி தவிக்கும் தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-05-12 22:15 GMT
பாவூர்சத்திரம், 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுப்பகுதிகளான மடத்தூர், திப்பணம்பட்டி, அரியப்பபுரம், சுந்தரபாண்டிபுரம் மேலப்பாவூர், கீழப்பாவூர், பாவூர்சத்திரம் உள்ளிட்ட ஊர்களில் 100 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் நாட்டுப்புற கலைஞர்களாக உள்ளனர். இதில் நாதஸ்வரம், நையாண்டி மேளம், வில்லிசை, மகுட கலைஞர்கள் என்று அனைத்து இசைக் கலைஞர்களும் இருக்கின்றனர். இவர்கள் மனதை மயக்கும் இசையால் பிறரை மகிழ்விக்கும் இவர்களுக்கு, இவர்களது வாழ்வில் வசந்த காலம் என்பது கானல் நீர் போன்று தான் உள்ளது.

இவர்கள் கோவில் கொடை விழா, திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிக்கு சென்றுதான் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். பள்ளி விடுமுறை காலத்தில் தான் கோவில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும். தற்போது கொரோனா ஊரடங்கால் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கொடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பணம் பெற்ற நிகழ்ச்சிகள் கூட நடைபெறவில்லை. விழாக்களுக்கு விழா நடத்துபவர்கள் கொடுத்த முன்பணத்தை திருப்பி வாங்கிச் சென்று விட்டனர். இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி விட்டது. அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

நிவாரண உதவி வழங்க கோரிக்கை

இதுகுறித்து தென்காசி மாவட்டம் நையாண்டி மேள கிராமிய கலைஞர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் பி.செல்வராஜ் கூறியதாவது:-

இந்த தொழிலை நம்பி தான் நாங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம். தற்போது வறுமையில் வாடுகிறோம். அரசு நிவாரணம் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும். எனவே அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அடையாள அட்டை வைத்திருக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் நிவாரண நிதியும், நிவாரண பொருட்களும் வழங்க வேண்டும். மேலும் 58 வயது முதிர்ந்த அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல வாரியங்கள் கொடுத்த உதவித்தொகை போதுமானதாக இல்லை. எனவே அரசு வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10000 உதவி தொகையாக வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்