கொளுத்தும் கோடை வெயில்: குளமாக மாறிய கருப்பாநதி அணை - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொளுத்தும் கோடை வெயிலால் கருப்பாநதி அணை வறண்டு குளமாக மாறியது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2020-05-12 22:45 GMT
கடையநல்லூர், 

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி மிகப்பெரியதாகும். இந்நகராட்சியில் 33 வார்டுகளில் 29 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் தண்ணீர் தேவைக்காக கருப்பாநதி குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி 35 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 45 லட்சம் லிட்டர் தண்ணீரும் பெற்று ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வந்தனர்.

தற்போது கொளுத்தும் கோடை வெயிலால் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை வறண்டு குளமாக மாறியது. அதன் நீர்மட்டம் 35 அடியாக குறைந்தது. அதில் சகதி 10 அடி உள்ளது. மீதி 25 அடி மட்டும் தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக 5 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்படுகிறது. இதனால் கருப்பாநதி அணையில் இருந்து வரும் தண்ணீர் பெரியாற்று படுகையில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி 12 திறந்தவெளி கிணற்றில் இருந்து 45 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற்று தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் 32 லட்சம் லிட்டர் தண்ணீர் 20 லட்சம் லிட்டர் தண்ணீராக குறைந்து விட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

நகராட்சி ஆணையாளர் பொறுப்பு தங்கப்பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடையநல்லூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கருப்பாநதி அணை 35 அடியாக குறைந்து விட்டது. தற்போது குடிநீருக்காக கருப்பாநதி அணையில் இருந்து 5 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இருப்பினும் கோடை வெயிலால் வறண்டு கிடக்கும் ஆற்றுப்படுகையில் திறந்துவிடப்படும் 5 கனஅடி தண்ணீரில் பாதி அளவே பெரியநாயகம் கோவில் அருகே உள்ள நீரேற்று நிலையத்துக்கு வந்தடைகிறது.

எனவே ஆற்றுப்பகுதியில் உள்ள 12 நகராட்சி கிணற்றில் ஒருநாள் விட்டு ஒருநாள் கிடைக்கும் 45 லட்சம் லிட்டர் நீரையும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் படி கிடைக்கும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரையும் சேர்த்து நகரில் உள்ள 13 உயர்மட்ட குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றி பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். எனவே நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்